top of page
Search

இலங்கை இனச்சிக்கல்களும் தமிழக காங்கிரஸ் தலைமையின் அறிக்கையும் ஏழு தமிழர் விடுதலையும்.

  • Writer: Siva Apt
    Siva Apt
  • Jan 23, 2021
  • 4 min read


தமிழகத்தில் தமிழீழ அரசியலும் இந்தியாவில் இலங்கை அரசியலும் இரண்டற கலந்திருப்பது மறுக்க முடியாத உண்மை.


சாதி ரீதியாக பிரிந்து கிடந்த மலையகத் தமிழர்கள் நேருவின் முயற்சியால் இலங்கை இந்தியர் காங்கிரஸ் என்ற பெயரில் 25.07.1939 அன்று ஒருங்கிணைந்தனர்.


1947-48 களில் மலையகத் தமிழர்களின் வாக்குரிமையும் குடியுரிமையும் பறிக்கப்பட்டது ஜவஹர்லால் நேருவும் தந்தை செல்வாவும் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.


குடியுரிமை பறிக்கப்பட்ட தமிழர்கள் 1964 வரையில் இலங்கையை விட்டு வெளியற்றப்படவில்லை.


நேருவின் மறைவிற்குப் பிறகு

1964 ஆம் ஆண்டு சாஸ்திரி - சிறிமாவோ ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு இலங்கையில் ஐந்து தலைமுறைகளுக்கு மேல் இலங்கைத் தமிழரை விட கூடுதல் எண்ணிக்கையில் வாழ்ந்து வந்த ஐந்து லட்சம் மலையக தமிழர்கள் இலங்கையில் இருந்து பலவந்தமாக பிடுங்கி ஏறியப்பட்டு தாங்கள் பார்த்தே அறியாத இந்தியாவுக்குள் குப்பைகளை போல வீசி எறியப்பட்டனர்.


1964 ஆம் ஆண்டு சாஸ்திரி- சிறிமாவோ ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கு கிட்டத்தட்ட பொருட்களைப் போல ஏற்றுமதி செய்யப்பட்ட 5 இலட்சம் பேர்களைத் தவிர இரண்டு லட்சம் பேருக்கு இலங்கை குடியுரிமை வழங்குவது எனவும் மீதமுள்ள முன்று லட்சம் மலையகத் தமிழர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டு அவர்களுடைய நிலைமை பின்னர் முடிவுசெய்யப்படும் எனவும் அவர்களது வாழ்வு அந்தரத்தில் தொங்கவிடப்பட்டது.


தனது கணவர் புத்த பிக்குவால் கொலை செய்யப்பட்ட பின்னர் திடீர் பிரதமரான திருமிகு சிறிமாவோ பண்டார நாயக்காவுடன் 1964 ஆம் ஆண்டு காங்கிரஸின் திருவாளர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களுடன் டெல்லியில் ஏழு நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தி மலையக தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்கியபோது இந்தியாவும் தமிழகமும் நீண்ட அரசியல் அறிதுயிலில் ஆழ்ந்து இருந்தது.


பின்னர் இந்திராவே இந்தியா என்ற காலகட்டத்தில் 1974 ஆண்டு மே 18 அன்று இந்தியாவின் அணு ஆயுத சோதனை ராஜஸ்தானில் நடத்தப்பட்ட போது உலக நாடுகள் இந்தியாவிற்கு எதிராக பொருளாதார தடை என அணி திரண்டதை சமாளிக்கவும்¸ இலங்கையை இந்தியாவிற்கு ஆதரவாக மாற்றவும் 1964 ஒப்பந்தத்தில் விடுபட்ட நாடற்ற மூன்று லட்சம் பேர்களில் ஒன்றரை லட்சம் மலையகத் பேர்கள் இந்திரா- சிறிமாவோ பண்டார நாயக்கா ஒப்பந்தம் மூலம் பணயம் கொக்கப்பட்டு மன்னார் கடலைக் கடந்து தூத்துக்குடியிலும்¸ ராமேஸ்வரத்திலும் தங்க வைக்கப்பட்டு பின்னர் அவர்களுக்கு அறிமுகமற்ற தமிழ்நாடு முழுவதும் சிதறடிக்கப்பட்டனர்.


1968-1976 ஆம் ஆண்டுகளில் அன்றைய தி.மு.க. அரசு டேன்டீ TANTEA என்ற நிறுவனத்தை இலங்கையிலிருந்து வெளியற்றப்பட்ட தேயிலைத் தோட்ட மலையக தமிழர்களுக்காக எற்படுத்தினாலும் கூட இன்று வரை மலையக தமிழர்கள் அனைவருக்கும் முறையாக மறுவாழ்வு வழங்கப்படவில்லை.


1974 ஆம் ஆண்டு தமிழக மீனவர்களின் மீன்பிடி தளமாகவும் நம்புதாளை சீனிகுப்பன் கட்டிய அந்தோணியார் கோவில் அமைந்த கச்சத்தீவு திருமிகு இந்திரா காந்தி அம்மையாரால் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது


நூறாண்டுகளுக்கு மேல் இலங்கையை காப்பி தேயிலை¸ இரப்பர் விளையும் வளமான நாடாக மாற்றிய இந்திய வம்சாவளித் தமிழர்களை இலங்கையும்¸ இந்தியாவும் உதைத்து விளையாடினாலும் கோல் அடித்தது என்னவோ குட்டிநாடான இலங்கை என்றுதான் கருத வேண்டும்.


இலங்கை இந்தியாவை மிரட்டி கச்சத்தீவை பெற்றுக் கொண்டதிலும் ஆறரை லட்சம் தமிழர்களை ஏற்றுமதி பண்டங்களாக மாற்றியதிலும் தமிழகத்தின் அன்றைய காங்கிரஸ் அரசியல்வாதிகளுக்கும் இந்தியாவிற்கும் பெரும் பங்கு உண்டு.


1948-ல் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பிற்கு எதிராக குரல் கொடுத்த இடதுசாரிகளும் தந்தை செல்வநாயகமும் 1974 ஒப்பந்தத்திற்கு துணை நின்றது கொஞ்சம் வருத்தம் தரும் செய்திதான்.


1956-ல் இயற்றப்பட்ட சிங்களம் மட்டுமே சட்டம்¸ ஒரு வருடத்தில் கிழித்து குப்பைத் தொட்டியில் எறியப்பட்ட 1957 செல்வா- பண்டார நாயக்கா ஒப்பந்தம்¸ 1974 நாளவது உலக தமிழ் மாநாட்டில் ஒன்பது தமிழர்கள் இறப்பு¸ மனித குலமே வெட்கத் தலைகுனியும் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையைப் போன்ற 1983 ஆம் ஆண்டின் தமிழர் மீதான இனப் படுகொலைகள், தமிழகத்திற்கு தப்பி வந்த 100000 அகதிகள் என ஏராளமான காரணங்கள் தமிழர் தனி நாடு கேட்க இருந்த போதிலும் இந்தியா இலங்கை ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட திரு.ராஜீவ் காந்தியால் கொண்டு வரப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் கூட முழுமையாக நிறைவேற்றப்படாமல் கைவிடப்பட்டது.


ராஜீவ் காந்தி ஜெயவர்தனா ஒப்பந்தப்படி இலங்கை அரசியலமைப்பில் 13 வது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு அதுவும் கூட இன்று நடைமுறைப்படுத்தவில்லை. தமிழக காங்கிரஸ் இந்திய இலங்கை ஒப்பந்தத்தையாவது நிறைவேற்ற வேண்டுகோள் விடுக்கலாம்.


1999 ஆம் ஆண்டு ராஜீவ் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.டி.தாமஸ்¸ டி.வாத்வா மற்றும் சையத் ஷா முகமது காத்ரி ஆகியோர் தங்களது தீர்ப்பின் பத்திகள் 374-377 களில் இந்தியா அமைதி படையினர் மேற்கொண்ட வன்முறைகளாலும் வன்புணர்ச்சிகளாலும் கோபமுற்ற விடுதலை புலிகள் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த காரணமாக குறிப்பிட்டனர்.



கோவிந்தன் குட்டியின் டி.என்.சேஷன் குறித்த நூல் ராஜீவ் கொலையை இஸ்ரேலின் மொசாத் செய்ததாகவும்¸ தமிழக டிஜிபி மோகன் தாஸின் மறைமுக நாவல் ராஜீவ் கொலையை செய்தது ஓலாப் பால்மேயின் போபர்ஸ் ஆயுதபேர கொலையாளிகள் எனக் கூறுவதையும்,ராஜீவ் கொலைக்கு காரணம் சந்திரசாமியும் சுப்பிரமணியசாமியும் என திருச்சி வேலுச்சாமியும் கூறுவதையும் புறந்தள்ளி விட்டு ராஜீவ் காந்தி கொலையில் சிறையில் முப்பது வருடங்களாக இருக்கும் ஏழு பேர்களுக்கும் கொலைச்சதியில் பங்கோ அல்லது அறிதலோ உள்ளது என ஒரு வாதத்திற்காக ஏற்றுக்கொண்டால் கூட மகாத்மா காந்தி படுகொலையில் ஈடுப்பட்ட இந்து மகா சபையின் நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே பதினாறு வருட சிறைத்தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட போது வாயை மூடிக்கொண்டிருந்த காங்கிரஸ் தற்போது திருவாய் மலர்வது ஏன் என்று தெரியவில்லை.


ராஜீவ் காந்தி படுகொலையில் உச்சநிதிமன்றத்தின் தீர்ப்பின்படியே பார்த்தாலும் பிரபாகரன்¸ பொட்டு அம்மன்¸ அகிலா ஆகியோர் சதியின் முதல் வட்டத்திலும் சிவராஜன்¸ தனு¸ சுபா ஆகியோர் சதியில் இரண்டாம் வட்டத்திலும் முருகன்¸ பேரறிவாளன்¸ நளினி¸ ராபார்ட் பயாஸ்¸ ஜெயக்குமார்¸ சாந்தன்,ரவிச்சந்திரன் சதியின் முன்றாம் வட்டத்திலும் இருந்தார்கள் என்று கொண்டோமனால் சதியின் நான்காம் வட்டத்தில் தமிழர்கள் அனைவருமே சதியாளர்களாக கருதப்பட வேண்டும்.


1980களில் தமிழ் ஈழம் அமைய இந்தியா உதவ கூடாது என்ற கொள்கையை வகுத்து கொண்டே தமிழ் போராளி குழுக்களுக்கு ஆயுத பயிற்சி கொடுத்த திருமிகு. இந்திரா காந்தி அவர்கள்


தமிழீழத்திற்கு எதிரான இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்து கொண்டே தமிழ் ஈழம் அமைக்க ஒரு போராளிக் குழுவுக்கு மட்டும் கணக்கில் வராத கருப்பு பணம் இரண்டு கோடி ரூபாய் கொடுத்த திரு.எம்.ஜி.ஆர்.


1980களிலிருந்து பிரபாகரன் படத்தை அட்டையில் போட்டு விற்பனைகளை அதிகரித்த தமிழக பத்திரிகைகள்.


விடுதலை புலிகள் தங்கள் உருமறைப்பு ஆடைகளின் நிறத்தை மாற்றுவதையே தலைப்பு செய்தியாக்கும் ஆனந்த விகடன் உள்ளிட்ட வெகுஜன பத்திரிக்கைகள் அதன் தீவிர ரசிகர்களான தமிழக வாசகர்கள் எல்லோருமே நான்காம் கட்டத்தில் அடங்குவார்.


பாரதீய ஜனதா கட்சியின் குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை தமிழ் அகதிகள் ஒருவர் கூட குடியுரிமை பெற தகுதி அடையமாட்டார்கள். பாகிஸ்தானி ¸ பங்களாதேஷ் ¸ ஆப்கன் இந்துக்கள் என போகாத ஊருக்கு வழி சொல்லும் புதிய குடியுரிமை சட்டம் பர்மாவின் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கோ¸ தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்களில் வசித்து வரும் 59 ஆயிரம் தமிழ் இந்து ஏதிலிகளுக்கு குடியுரிமை வழங்கவில்லை.

இலங்கை பிரச்சினையில் இந்தியாவால் உருவாக்கப்பட்ட இனச்சிக்கல்கள் குறித்து எவ்வித அக்கரையுமற்ற தமிழக காங்கிரஸ் தலைமை தற்போது ஏழு பேர் விடுதலையின் போது வாய் திறப்பது ஒரு வேளை தங்களது ஏஜமானுக்கு மகிழ்ச்சி அளிக்கலாம் என்று எண்ணி இருக்கக்கூடும்.


19.12.2019 தேதியிட்ட பிரண்ட்லைன் பத்திரிக்கை செய்திபடி 59 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்களிலும் 30 ஆயிரம் பேர் முகாமுக்கு வெளியிலும் வசிப்பதாக குறிப்பிடுகிறது.


இலங்கையில் உள்நாட்டு குடி அகற்றப்பட்டோரின் தேவைகள் தீர்க்கப்படவில்லை. தமிழக முகாமில் இருக்கும் அகதிகளை இலங்கைக்கு அவர்கள் போக விரும்பாவிட்டாள் இந்திய குடியுரிமை வழங்கவோ அல்லது விரும்பினால் திரும்ப அனுப்பவோ¸ ஒரு சுட்டு விரலை கூட அசைக்காத தமிழக காங்கிரஸ் தலைமை இன்று ராஜீவ் காந்தி கொலையை காரணம் காட்டி ஏழு தமிழர் விடுதலைக்கு குறுக்கீடாக இருப்பது தேர்தல் சமயத்தில் பா.ஜ.க வை மட்டுமே மகிழ்ச்சி அடைய வைக்கும்.


இரு கோடுகள் தத்துவப்படியே பா.ஜ.க. வை விட காங்கிரஸ் ஒரளவிற்கு பரவாயில்லை என்ற மனநிலையில் இருக்கும் தமிழக மக்கள் திரு.ராஜீவ் காந்தி பாபர் மசூதியில் இராமர் சிலைகளை வழிபட திறந்து விட்டதையோ, யாழ்ப்பாணத்தில் இந்தியஇலங்கை அரைகுறை ஒப்பந்தத்தின் விளைவுகளையோ மறக்க முயற்சிக்கின்றனர்.


முப்பது ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களும் மகாத்மா காந்தி கொலையில் நேரடியாக சதியில் பங்குபெற்று அரசால் முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்ட கோபால் கோட்சேவை விட இரு மடங்கு காலம் சிறையில் வாடுகின்றனர்.


திருவாளர்கள் ரெங்கராஜன் குமார மங்கலம்¸ ஜி கே வாசன் உள்ளிட்ட அரசியலற்ற அரசியல்வாதிகளை

பாரதிய ஜனதா கட்சியினர் காங்கிரஸ் கட்சியிலிருந்தே பெற்றுக் கொள்கின்றனர்.


அப்படி பெற்றுக் கொள்ளப்பட்ட ஒருவரான காங்கிரஸ் கட்சியின் சார்பில் இருமுறை நாக்பூர் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும் காங்கிரஸ் கட்சியின் மத்திய நகர மேம்பாட்டு அமைச்சருமாக இருந்து பின்னர் பாஜ௧ வுக்கு தாவிய தற்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தேர்தலை மனதில் கொண்டு ஏழு தமிழர் விடுதலையில் முடிவெடுக்கும் சாத்தியகூறைக் கூட எதிர்த்து காங்கிரஸ் தலைவர் திருவாளர் கே.எஸ். அழகிரி அவர்கள் அறிக்கை விடுவது தமிழகத்தில் கன்னியாகுமரியில் மட்டுமே வாழும் காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டுமொத்த தமிழகத்தில் இருக்கும் கொஞ்சநஞ்ச ஆதரவும் தேய்ந்து கட்டெறும்பாய் மாறும் சூழல் ஏற்படும்.


ராஜிவ் படுகொலையை யாரும் நியாயப்படுத்த இயலாது அது ஜனநாயக விரோதமானது ஆனால் மதவாத காலகட்டத்தில் புதிய குடியுரிமை சட்டத்தால் மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்தியும் பணமதிப்பிழப்பு¸ ஜி.எஸ்.டி என பெரருளாதாரத்தை குரங்குக் கை பூ மாலையாய் ஆக்கியும்¸ வேளாண்மை சட்டம் என்ற பெயரில் விவசாயிகள் கேட்காத சட்டங்களை அவர்கள் மேல் திணித்தும்¸ நீட் மூலம் தமிழகத்தின் அடிமட்ட மக்களை மருத்துவ கல்வியில்; இருந்து அப்புறப்படுத்தியும்.

தமிழகத்தின் பத்தொன்பதாயிரம் கோடி ஜி.எஸ்.டி நிலுவை தொகையை தரமல் பிற மதவாத மாநிலங்களில் மாடுகளுக்கு ஸ்வெட்டர் போட பயன்படுத்தியும் இருக்கும் சூழலில் பாஜகவின் மதவாத அரசியலுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகள் மற்றும் இயக்கங்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டிய சூழலில் ஏழு தமிழர் விடுதலைக்கு எதிராக நமத்துபோன அறிக்கைகளை கொடுக்கும்

தமிழக காங்கிரஸ் தலைவர் திருவாளர் கே.எஸ். அழகிரி அவர்கள் திருவாளர் ஜி கே வாசனுடனோ பா.ஜ.க விலோ இணைவது தமிழக காங்கிரசுக்கு நன்மை பயக்கும்.


மதுரை -20

22.01.2021. தி.லஜபதி ராய்


ஆதார நூல்கள்:

1.என்.சரவணன் - கள்ளத்தோணி -2019

குமரன் புத்தக இல்லம்

குமரன் காலனி

வடபழனி

சென்னை-25

2.ஸ்டேட் எதிர் நளினி மற்றும் பலர் 11.05.1999

உச்ச நீதிமன்ற தீர்ப்பு

3.Assassination of Rajiv Gandhi An inside job ?

-Faraz Ahmad-2015

Vitasta publishing pvt ltd

New Delhi -110 002

4.திரு .கே எஸ் அழகிரி அவர்களின் அறிக்கை

Comments


Subscribe to Our Newsletter

Thanks for submitting!

  • White Facebook Icon

© 2021 by Public Journalists. All rights reserved.

bottom of page